இங்கு ஆதிசங்கரரால் கட்டப்பட்ட நரஸிம்மர் கோயிலும், வாசுதேவர் கோயிலும் உள்ளன. நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கும் இந்த வாசுதேவ பெருமாளைத்தான் ஆழ்வார் மங்களாசாசனம் செய்ததாகக் கூறுகின்றனர். இந்த கோயிலுக்கு சுமார் 1 கி.மீ. தூரம் படியிறங்கிச் செல்ல வேண்டும். கடல் மட்டத்திலிருந்து 6150 அடி.
மூலவர் பரமபுருஷன் என்ற திருநாமத்துடன் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். ஆனால் தற்போது கருவறையில் சாளக்கிராம நரசிம்ம மூர்த்தியே மூலவராக உள்ளார். தாயாருக்கு பரிமளவல்லி நாச்சியார் என்பது திருநாமம். பகவான் பார்வதி தேவிக்கு பிரத்யக்ஷம்.
திருப்பிருதி என்ற ஸ்தலம் நந்தப்பிரயாகைதான் என்றும் சிலர் கூறுவர். இவை இரண்டுமே அல்ல, இமயமலையின் உட்புறப் பகுதியில் உள்ளது என்றும் சிலர் கருதுகின்றனர். ஆதிசங்கரர் இங்கு ஜ்யேஹிஷ் பீடத்தை ஸ்தாபித்து ஒரு முசுக்கட்டை மரத்தடியில் தவம் செய்தார் என்றும், பின்னர் ஞானம் பெற்று சங்கர பாஷ்யத்தை இயற்றினார் என்றும் கூறப்படுகிறது.
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். ஆழ்வார் முதலில் இந்த ஸ்தலத்தை மங்களாசாசனம் செய்த பிறகு, தென்திசை நோக்கி வரும் வழியில், அங்கு உள்ள பிற திவ்யதேசங்களைத் தரிசித்து மங்களாசாசனம் செய்தார் என்று கூறப்படுகிறது.
இக்கோயில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|